திருப்பூர்;எதிர்கால தலைமுறை முழுமையான ஊட்டச்சத்து பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில், மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்கின்றன. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வாயிலாக, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.திருப்பூர் மாவட்டத்தில், குறு மையங்கள் -169, முதன்மை மையங்கள் -1,343 என, 1,512 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில், ஊராட்சிகள் -974 மையங்கள், பேரூராட்சிகள் -154, நகராட்சிகள் -129, மாநகராட்சி -255 என, 1,512 மையங்கள் இயங்கி வருகின்றன.வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், ஆறு வயது வரையுள்ள குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.மையத்தில், திங்கள் - தக்காளி சாதம் மற்றும் வேக வைத்த முட்டை; செல்வாய் - கலவை சாதம் மற்றும் பாசிப்பயறு அல்லது கொண்டக்கடலை (சுண்டல்); புதன் - காய்கறி புலாவ் சாதம் - வேகவைத்தமுட்டை, வியாழன் - எலுமிச்சை சாதம் மற்றும் முட்டை, வெள்ளி - பருப்புசாதம் மற்றும் வேக வைத்த உருளைகிழங்கு, சனிக்கிழமை - கலவை சாதம் வழங்கப்படுகிறது.
குழந்தைக்கு ரூ.1.50
அரிசி, முட்டை ஆகியன அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அத்துடன், காய்கறி, மளிகை செலவுகளுக்காக, ஒரு குழந்தைக்கு, 1.50 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. இது, 10 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயம் செய்த தொகை என்பதால், புதிய விலைவாசி உயர்வில் சமாளிக்க முடியாமல், ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.
சிலிண்டர் மானியம்
சமையல் காஸ் சிலிண்டர் மானியமாக, 407 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது; இரண்டு மாதங்கள் வரும் என்பதால், ஒவ்வொரு சிலிண்டர் எடுக்கவும், 700 ரூபாய் கை காசை செலவழிக்கின்றனர்.காய்கறி, மளிகை பொருள் செலவுகளை, இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை, அமைப்பாளர்களே சொந்த செலவில் செய்ய வேண்டும்; அதற்கு பிறகே, செலவு தொகை வருகிறது. அதாவது, சம்பள பணத்தை, அங்கன்வாடிக்கே செலவழிக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
சில்லரை செலவு தொகை
அங்கன்வாடி மைய சில்லரை செலவுகளுக்காக, மாதம், 50 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது; தற்போதைய விலைவாசியை கணக்கிட்டு, 200 ரூபாய் வழங்க வேண்டும். திட்ட பணிகளுடன், பல்வேறு கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளையும் செய்கின்றனர்.பலமுறை, ஒன்றிய திட்ட அலுவலகம் சென்று வருகின்றனர். அதற்கான போக்குவரத்து செலவாக, மாதம், 40 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது; மாதம், 400 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க செயலாளர் சித்ரா கூறுகையில், ''விலைவாசி உயர்வை கணக்கிட்டு, சிலிண்டர் விலை, போக்குவரத்து, சில்லரை செலவு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். உணவு செலவுகளை சமாளிக்க, முன்பணமாக, மாதம், 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்க வேண்டும். காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்; தகுதியானவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும். பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் அறிவித்தோம்.கோரிக்கையை நிறைவேற்றுவதாக, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதால், தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.காய்கறி, மளிகை பொருள் செலவுகளை, இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை, அமைப்பாளர்களே சொந்த செலவில் செய்ய வேண்டும்; அதற்கு பிறகே, செலவு தொகை வருகிறது. அதாவது, சம்பள பணத்தை,
அங்கன்வாடிக்கே செலவழிக்க வேண்டிய நிலை தொடர்கிறது.