காஞ்சிபுரம் வடக்குப்பட்டு அகழாய்வு பணி துவக்கம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
காஞ்சிபுரம் வடக்குப்பட்டு அகழாய்வு பணி துவக்கம்
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

ஸ்ரீபெரும்புதுார் : மத்திய தொல்லியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டில் நேற்று, அகழாய்வு பணிகள் துவங்கின. ''அகழாய்வில் பல வரலாற்று தகவல்கள் கிடைக்கும்,'' என, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.



காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில், வடக்குப்பட்டு ஊராட்சி அமைந்துஉள்ளது. இங்கு, புவி மேற்பரப்பில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. வடக்குப்பட்டில் பாதுகாக்கப்பட்ட மூன்று தொல்லியல் மேடுகள் உள்ளன.அந்த மேடுகளில், அகழாய்வு செய்ய, மத்திய தொல்லியல் துறையினர் திட்டமிட்டனர். இதையடுத்து, வடக்குப்பட்டில் பூமி பூஜையுடன் நேற்று அகழாய்வு பணிகள் துவங்கின. சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமைவகித்தார்.

வடக்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்த் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட பிரபல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார்.தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் நிறைய அகழாய்வுகள் நடக்க வேண்டும். அப்போது தான், உலகத்தர உண்மைகள் வெளியே வரும். வடக்குப்பட்டு தொல்லியல் மேடு பகுதியை தோண்டி பார்த்த பின் தான் பல வரலாற்று தகவல்கள் வெளியே வரும் என நம்புகிறோம்.

தமிழகத்தில் 70 வருடம் அகழாய்வு செய்யாமல் இருந்துள்ளோம். வடக்குப்பட்டு அகழாய்வில் பல வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கும்.வடக்குப்பட்டில் 2 மீட்டர் உயரம் உள்ள தொல்லியல் மேடு பகுதியை 10 வருடங்களுக்கு முன், சென்னை பல்கலை கழக மாணவர்கள் கண்டறிந்தனர். இதன் அடைப்படையில் தற்போது அகழாய்வு பணிகள் துவங்கி உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் தொல்லியல் துறை பொறியாளர் ஜிலானி பாஷா சத்யம், தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X