பூண்டி நீர்த்தேக்கத்தின் உபரி நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை | சென்னை செய்திகள் | Dinamalar
பூண்டி நீர்த்தேக்கத்தின் உபரி நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை
Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 

ஊத்துக்கோட்டை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்தி, அதன் கொள்ளளவை அதிகரிக்க, நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.latest tamil newsபூண்டி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்துவதன் வாயிலாக, அதன் மொத்த கொள்ளளவை, 3.2 டி.எம்.சி.,யிலிருந்து, 5 டி.எம்.சி.,யாக உயர்த்த முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.இதனால், மழைக்காலங்களில் அதிக அளவு நீர் தேக்கப்படுவதுடன், உபரிநீர் வீணாவதும் தடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றில் செம்பரம்பாக்கம் மட்டும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. மற்ற அனைத்து நீர்த்தேக்கங்களும் திருவள்ளூரில் அமைந்துள்ளன.

மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீர், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் உள்ளிட்டவற்றின் வாயிலாக, மேற்கண்ட நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இந்த நீர் சேமித்து வைக்கப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

சில நேரங்களில் பருவமழை அதீதமாக பெய்யும் போது, நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரிப்பதால், பாதுகாப்பு காரணங்கள் கருதி, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.பருவமழை பொய்க்கும் காலங்களில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால், உபரிநீரை சேமிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் நடுவே, பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் ஆழத்தை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். பருவமழை காலத்தில் கிடைக்கும் மழை நீர் இந்த நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நீர்த்தேக்கம், தற்போது, 35 அடி ஆழமும், கொள்ளளவு 3.2 டி.எம்.சி.,யும் உடையதாக உள்ளது. இதன் ஆழத்தை மேலும், இரண்டு அடி அதிகரிப்பதன் வாயிலாக, நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவை, 5 டி.எம்.சி.,யாக அதிகரிக்க முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


தற்போதைய நிலையில், பருவமழையால் கிடைக்கும் நீர் தவிர, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியே, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 'ஜீரோ பாயின்ட்' வழியே, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை அடைகிறது.

இங்குள்ள இணைப்புக் கால்வாய் வாயிலாக புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. பின், அங்கிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி, சென்னை மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.மழைக்காலங்களில் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீருடன் சேர்ந்து, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தன் முழு கொள்ளளவை அடைகிறது.

தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் நீரை சேமிக்க முடியாமல், மதகுகள் வழியே வெளியேற்ற படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, பருவமழையும் கை கொடுத்து வருவதால், இந்த நீர்த்தேக்கத்திற்கான வரத்து அதிகரித்து, உபரிநீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பதன் வாயிலாக, வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவை குறைத்து, அதிக அளவு நீரை சேமித்து வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, நீர்த்தேக்கத்தின் ஆழத்தை இரண்டு அடி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக, மண் தரம் மற்றும் தரை கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பூண்டி நீர்த்தேக்கத்தை நேரில் ஆய்வு செய்தனர்.இது குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டு, சாத்தியக்கூறுகள் பற்றிய விரிவான கலந்தாலோசனை நடத்தி, அரசின் ஒப்புதல் கிடைத்த பின், நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்தும் பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.அறிக்கை சமர்ப்பிப்புமழைக்காலங்களில் வீணாக வெளியேற்றப்படும் உபரிநீரை தேக்கி வைக்க, இரண்டு அடி ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். இதற்கான நிதி ஒதுக்கப்பட்டால், பூண்டி நீர்த்தேக்கத்தை இரண்டு அடி ஆழப்படுத்தும் பணி துவங்கும். இதனால், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 5 டி.எம்.சி.,யாக உயரும். அதிக அளவு நீர் சேமிக்கப்படும்.
- நீர்வளத் துறை அதிகாரிகள்16 மதகுகள்!பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 1944ம் ஆண்டு, 121 சதுர கிலோ மீட்டரில், 65 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதற்காக, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு, மாற்று இடத்தில் குடி அமர்த்தப்பட்டனர். ஊன்றீஸ்வரர் கோவில் இடமாற்றம் செய்யப்பட்டது.
இதன் மொத்த கொள்ளளவு, 3.2 டி.எம்.சி., மற்றும் நீர்மட்டம், 35 அடியாக உள்ளது. கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர், முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேற்ற, 16 மதகுகள் உள்ளன. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், இந்த நீர்த்தேக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X