கோவை: ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்களுக்கான முக்கிய மூலப்பொருளான 'கோம்பர் நாயில்' கழிவு பஞ்சு விலை அதிரித்துள்ளதால் பொருட்களின் உற்பத்தியை ஐம்பது சதவீதமாக குறைத்துள்ளன.
கோவை மாவட்டத்தில், 100 ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உட்பட, தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட மில்கள் உள்ளன. இந்த மில்களுக்கு, ஸ்பின்னிங் மில்களிலிருந்து வெளியேறும் காட்டன் கழிவான, 'கோம்பர் நாயில்' கழிவு பஞ்சு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதிலிருந்து 'கிரே' நுால் தயாரிக்கப்படுகிறது. அவற்றை விசைத்தறிகள் பயன்படுத்தி காடா துணி தயாரிக்கிறது.
'கோம்பர் நாயில்' கரன்சி நோட்டு தயாரிப்புக்கான மூலப்பொருளாகவும் விளங்குவதால், பெரும்பாலான நாடுகள் நம் நாட்டிலிருந்து அதிக அளவு இறக்குமதி செய்கின்றன. தற்போது 'கிரே' நுால் தயாரிப்புக்கென 'கோம்பர் நாயில்' அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள, 500 'கிரே' நுால் தயாரிக்கும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்களும் தங்களது உற்பத்தியை, 50 சதவீதமாக குறைத்துள்ளன.
கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள, 250 ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்களும், தங்களது உற்பத்தியை, 50 சதவீதமாக குறைத்துள்ளன. இதனால், விசைத்தறிகளும் தங்களது உற்பத்தியை குறைத்துள்ளன.
ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேசன்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறுகையில்,''கோம்பர் நாயில்' விலை கிலோ ஒன்றுக்கு, 160 ரூபாயிலிருந்து, 120 ஆக குறைந்துள்ளது. அது மேலும் குறைந்து, 80 லிருந்து, 100 ரூபாய்க்குள் வர வேண்டும். தற்போது இதன் விலை உச்சத்தில் இருப்பதால் நாங்கள் உற்பத்தியை, 50 சதவீதமாக குறைத்துள்ளோம். விலை மேலும் குறைந்து சீரானவுடன் உற்பத்தியை மீண்டும் அதிகரிப்போம்,'' என்றார்.
பாதியாக குறைந்தது!
கோவையிலுள்ள, 100 ஓப்பன் எண்ட் மில்களிலிருந்து தினமும், 25 லட்சம் கிலோ 'கிரே' நுால் உற்பத்தி செய்யப்படுகிறது. மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. கிரே நுால் உற்பத்தி குறைந்ததால் கோவையிலுள்ள, 200க்கும் மேற்பட்ட விசைத்தறிகளின் மூலம் உற்பத்தியாகும் காடா உற்பத்தியும் பாதியாக குறைந்துள்ளது.