காசிமேடு: காசிமேடில், நள்ளிரவு முதலே மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால், மீன் விற்பனை களைகட்டியது.
தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம், கடந்த 14ம் தேதி முடிவடைந்தது.சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 14ம் தேதி முதல் விசைப்படகுகள் வாயிலாக மீன் பிடித்து வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக சிறிய மீன்கள் வரத்து அதிகம் இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காசிமேடு துறைமுகத்தில் மீன்களை வாங்க மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் அதிகளவில் குவிந்தனர்.
இரு வாரங்களாக மீன் விலை குறைந்திருந்த நிலையில், நேற்று சற்று விலை அதிகரித்தது. கடந்த வாரங்களை போலவே, நேற்றும் பெரிய வகை மீன்கள் அதிகமாக கிடைக்கவில்லை.
இருந்தும் வவ்வால், வஞ்சிரம், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை, கடந்த வாரத்தை விட கிலோ 100 முதல் 200 வரை அதிகமாக விற்பனையானது.சங்கரா, நெத்திலி, தும்பிலி, காரப்பொடி, நவரை, வெள்ளை ஊடான் உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. எனினும், அசைவ விரும்பிகள் அவற்றை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.