செய்திகள் சில வரிகளில் தர்மபுரி | தர்மபுரி செய்திகள் | Dinamalar
செய்திகள் சில வரிகளில் தர்மபுரி
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

மண் அள்ளிய லாரி பறிமுதல்
ஓசூர்: ஓசூர் அருகே சொக்கநாதபுரம் ஏரியில், திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக, ஓசூர் தாசில்தார் கவாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, தாசில்தார் மற்றும் அதிகாரிகள் ஏரி பகுதியில் சென்று சோதனை செய்தனர். அதிகாரிகள் வருவதை கண்ட அங்கிருந்த சிலர், லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதையடுத்து, நான்கு யூனிட் மண்ணுடன் இருந்த லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் கவாஸ்கர், பாகலுார் போலீசில் ஒப்படைத்தார். அவர் புகார்படி, சந்தோஷ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ.,வின் ஓ.பி.சி., அணி மற்றும் பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம், ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. அணிகளின் மாவட்ட தலைவர்கள் நேரு, பாபு தலைமை வகித்தனர். கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து, கட்சி பணிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துச்செல்ல ஆலோசனை வழங்கினார். மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், துணைத்
தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இலவச கண் பரிசோதனை முகாம்
ஓசூர்: ஓசூர் அருகே, பாகலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பாகலுார் அரிமா சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. பாகலுார் பஞ்., தலைவர் ஜெயராம் முகாமை துவக்கி வைத்தார். இதில், ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், கண் புரை, கண் நீர்அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு, இலவச சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதேபோல், கிட்டப்பார்வை மற்றும் துாரப்பார்வை உள்ளவர்களுக்கு, முகாம் நடக்கும் இடத்திலேயே, 300 ரூபாய் மதிப்புள்ள இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
இலவச மருத்துவ முகாம்
ஓசூர்: ஓசூர் அடுத்த உள்ளுகுறுக்கை பஞ்., அலுவலகத்தில், எஸ்.டி.பி.ஐ., கட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. கிளைத்தலைவர் முஹம்மத் ஜமீர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஷாநவாஸ் முகாமை துவக்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்டோருக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் ஷபியுல்லா, பொதுச்செயலாளர் ஷப்பீர் அஹமத் உட்பட பலர்
பங்கேற்றனர்.
மூதாட்டி சடலம் மீட்பு
ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்டிலுள்ள ஆவின் கடை அருகே, 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக, டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகார்படி, டவுன் போலீசார் சடலத்தை மீட்டனர். இறந்த மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. உடல்நிலை பாதித்து அவர் இறந்தது தெரிந்தது. ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மொபைல்் திருடியவருக்கு காப்பு
ஓசூர்: மதுரை மாவட்டம், மேலுார் அருகே கீழையூரை சேர்ந்தவர் செல்வம், 27. ஓசூர் அருகே பத்தலப்பள்ளியிலுள்ள, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் உட்பட, 6 ஊழியர்கள், நிறுவனத்திற்குள் உள்ள அறையில் தங்கியுள்ளனர். கடந்த, 27ல் நள்ளிரவில், அறைக்குள் நுழைந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி, நான்கு மொபைல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து சென்றார். செல்வம் புகார்படி, ஹட்கோ எஸ்.ஐ., வினோத்குமார் வழக்குப்பதிந்து விசாரித்தார். இதில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு சிவாஜி நகரில் வசிக்கும், கோலாரை சேர்ந்த சையத் ஆசிப் அகமது, 28, என்பவர், கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், நான்கு மொபைல்போன்கள் மற்றும் இரு கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும்,
ஒருவரை தேடி வருகின்றனர்.
கார் மோதி பெண் பலி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் மனைவி லட்சுமி, 35. இவர் நேற்று அதிகாலை மிட்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார், லட்சுமி மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து இறந்தார். சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி விவசாயி சாவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளியை சேர்ந்தவர் ராமன், 65. விவசாயி. இவர் நேற்று காலை மொபட்டில், கொத்தகிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் இருந்து எட்ரப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் பின்னால் வந்த, வேப்பனஹள்ளி அருகே பண்ணப்பள்ளியை சேர்ந்த சேஷன், 26, என்பவர், ராமன் மீது மோதினார். இதில் ராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சேஷன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
காரில் திருடிய வாலிபர் கைது
ஓசூர்: ஓசூர், தளி சாலையிலுள்ள ஜவகர் நகரை சேர்ந்தவர் முரளிமோகன், 40, பூ வியாபாரி; இவர் தன் காரை வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். இவரது கார் சாவி ஏற்கனவே தொலைந்து போயிருந்தது; இந்நிலையில், நேற்று காலை அப்பகுதிக்கு பைக்கில் வந்த இரு வாலிபர்கள், காரின் கதவை திறந்து, உள்‍ளேயிருந்த, 5,000 ரூபாயை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். இதை பார்த்த முரளிமோகன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாலிபர்களை மடக்கி பிடித்தார். இதில் ஒருவர் தப்பியோடி விடவே, பிடிபட்ட வாலிபரை மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சூளகிரி அருகே கும்பளத்தை சேர்ந்த ராமப்பா மகன் விவேகானந்தன், 22, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 5,000 ரூபாய் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய, கும்பளத்தை சேர்ந்த பிரபாகர், 25, என்பவரை தேடி வருகின்றனர்.
கராத்தே போட்டியில் வென்ற
மாணவருக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி: சேலத்தில், தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் ஹரிஸ் என்ற மாணவர், 12 வயது பிரிவில் முதல் பரிசை பெற்றார். கராத்தே போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவரையும், பயிற்சி அளித்த மாஸ்டர் ஷிகான் மாரியப்பன், உதவி மாஸ்டர் தம்பிதுரை ஆகியோரை தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


நிலத்தகராறில் 6 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே உள்ள கொத்தகிருஷ்ணப்பள்ளியை சேர்ந்தவர் பைரேசன். இவரது மனைவி லட்சுமி, 30. பைரேசனுக்கும் அவரது தம்பி மஞ்சுநாத், 45, என்பவருக்கும் நிலத்தகராறு உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் மஞ்சுநாதனும், லட்சுமியும்
தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மஞ்சுநாதன், அவருடனிருந்த ஜோதி, ஐயப்பன், பாக்கியலாதா ஆகிய நான்கு பேரும் லட்சுமியை தாக்கினர். காயமடைந்த லட்சுமி, வேப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதே போல் மஞ்சுநாதனும் போலீசில் புகார் அளித்தார். இரு தரப்பினரின் புகாரின்படி, இரு பெண்கள் உள்பட, ஆறு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரை தேடி
வருகின்றனர்.
8 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்
ஓசூர்: பீஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த இரு குடும்பங்கள், ஓசூர் அடுத்த ஜீமங்கலம் பகுதியில் தங்கி, செங்கல்சூளையில் கூலி வேலை செய்து வருகின்றன. விடுமுறை நாளான நேற்று, இரு குடும்பத்திலுள்ள, 10 வயதிற்கு உட்பட்ட, 5 சிறுமியர் உட்பட மொத்தம், 8 பேர், நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த காட்டாமணக்கு விதைகளை குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த பெற்றோர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் விபரீத முடிவு
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ், 31. கம்பைநல்லுாரில் சலுான் கடை வைத்திருந்தார். குடும்பத்தகராறில் அவர் மனைவி பராசக்தி, தன் இரண்டு குழந்தைகளுடன் நாயக்கனுாரிலுள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் சென்று விட்டார். கடந்த, 28ல் குடிபோதையில் பூச்சிக்கொல்லி மருந்தை ரமேஷ் குடித்துள்ளார். அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். புகார்படி, கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு தொல்லையை
கட்டுப்படுத்த கோரிக்கை
அரூர்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கில், தினமும், காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்கின்றனர். இந்நிலையில், மைதானத்தில் பாம்புகள் அடிக்கடி உலா வருவதால் சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, பாம்பு தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டுமென,
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழைத்தார் விலை உயர்வு
அரூர்: அரூரிலுள்ள மண்டிகளுக்கு வாழைத்தார் வரத்து சரிந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது.
இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: அரூருக்கு தொட்டியம், முசிறி ஆகிய இடங்களிலிருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகிறது. கடந்த, நான்கு நாட்களுக்கு முன், அரூரிலுள்ள மண்டிகளில் கற்பூரவல்லி, பூவன் வாழைத்தார் ஒன்று, 400 ரூபாய் என விற்றது. தொட்டியம், முசிறியில் காற்றுடன் பெய்த மழையால், அதிகளவில் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால், வாழைத்தார் வரத்து வெகுவாக குறைந்து, அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரூரிலுள்ள மண்டிகளில், நேற்று கற்பூரவல்லி, பூவன் வாழைத்தார் ஒன்று, 600 ரூபாய் என விற்பனையானது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X