மண்மங்கலம்-வாங்கல் இடையே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் மேல் தளத்தில், பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் பீதியில் செல்கின்றனர்.
கரூர்-சேலம் இடையே போடப்பட்ட ரயில்வே இருப்பு பாதையில், கடந்த, 2013 முதல் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்போது, கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் இருந்து வாங்கல் பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே கடந்த, 2013ல் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
பாலத்தை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனுார் பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலத்தின் மேல் தளத்தில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் கலவைகள் உதிர்ந்து, ஜல்லி கற்கள் வெளியே தெரிகின்றன. பாலத்தின் மேல்தளத்தின் இணைப்புகளில் உள்ள, இரும்பு கம்பிகளும் பெயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, மண்மங்கலம்-வாங்கல் இடையே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் மேல் தளத்தில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சரி செய்ய, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.