நாமக்கல்லில் அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை, 4:45 மணிக்கு, சேலம் - நாமக்கல் சாலையில், மல்லுார் வழியே, சேலம் விமான நிலையம் சென்றார். முன்னதாக, மல்லுார் போலீசார், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம், 12:00 மணிக்கு, பனமரத்துப்பட்டி பிரிவு பொய்மான் கரட்டில் துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, கணபதி நகரை சேர்ந்த, 30 வயது வாலிபர் என தெரிந்தது. போலீசார் சென்றபோது, வாலிபர் சேலம் சென்று விட்டார். அங்கு சென்ற போலீசார், வாலிபரை பிடித்து விசாரித்தபோது, பொம்மை துப்பாக்கியை வைத்து, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தது தெரிந்தது. இதனால், அவருக்கு உரிய அறிவுரை கூறி, போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.