''தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை ஒரே ஆண்டில், 14வது இடத்தில் இருந்து, மூன்றாவது இடத்துக்கு உயர்த்தியது தான் திராவிட மாடல் ஆட்சி,'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
தி.மு.க., சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். பொது செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் நேரு முன்னிலை வகித்தனர். எம்.பி., ராஜேஷ்குமார் வரவேற்றார். இதையொட்டி கருத்தரங்கு நடந்தது. இதில் 'திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம்' என்ற தலைப்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழகத்தில் பல வகையான ஆட்சி முறை வந்தாலும், 21ம் நுாற்றாண்டில் திராவிட மாடல் ஆட்சிதான், இந்தியாவை, தமிழகத்தை நோக்கி பார்க்க வைத்தது. சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை, இட ஒதுக்கீடு ஆகியவற்றை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் மனதில், தன்னம்பிக்கையை உருவாக்கிய திட்டம்தான், நான் முதல்வன் திட்டம். ஒரே ஆண்டில், தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை, 14வது இடத்தில் இருந்து, மூன்றாவது இடத்துக்கு உயர்த்தியதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில்
எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது: ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணாதுரை. கருணாநிதி முதல்வரான பிறகு, ஏழைகளுக்கு இடம், உடை, உணவு ஆகியவற்றை உறுதி செய்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கருணாநிதி வழங்கினார். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அதையும் தாண்டி, பதவியேற்ற ஒரே ஆண்டுக்குள், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி சாதனை படைத்துள்ளார். இவ்வாறு சிவா பேசினார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில், எம்.பி., ராசா பேசியதாவது: தேசத்தின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை கருணாநிதி வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு அதிகாரங்களை பகிராமல், அதிக சட்டங்களை இயற்றி கொண்டுள்ளது. வரிகளை சரியாக பகிர்ந்து கொடுப்பதில்லை. இதை முதல்வர் ஸ்டாலின், பிரதமர் இருக்கும் மேடையிலேயே நேரடியாக சுட்டிக்காட்டினார். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஈ.வெ.ரா.,வின் தனி தமிழ்நாடு கோரிக்கையை விடுத்து, மத்தியில் கூட்டாட்சி என்று கேட்டு வருகிறோம். மீண்டும் எங்களை ஈ.வெ.ரா., வழியில் செல்ல வைத்து விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், பெண்களின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா பேசினர். கருத்தரங்கில் அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், முன்னாள் எம்.பி., சுந்தரம், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.