சாராயம் காய்ச்ச பதுக்கிய, 70 மூட்டை வெல்லத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
தலைவாசல் போலீசார், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, சிறுவாச்சூர் ஊராட்சி, சாலையம்மன் நகரில், 'ரோந்து' பணியில் ஈடுபட்டனர். அப்போது, 'டீலக்ஸ்' பைக்கில், 110 லிட்டர் சாராயம், இரு மூட்டை வெல்லம் கடத்தி வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் கல்வராயன்மலை, கீழ்பாச்சேரியை சேர்ந்த சின்ராஜ், 25, என தெரிந்தது. அவரிடம் விசாரித்த பின், சிறுவாச்சூர், பஜார் தெருவில் உள்ள ராஜசேகரன், 65, குடோனில், சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்த, 68 மூட்டைகள் வெல்லத்தை பறிமுதல் செய்தனர். நேற்று, சின்ராஜ், ராஜசேகரனை கைது செய்த போலீசார், 70 மூட்டை வெல்லம், 110 லிட்டர் சாராயம், பைக்கை பறிமுதல்
செய்தனர்.
நாட்டு துப்பாக்கி
கெங்கவல்லி, 74.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மணி, 27. இவர் மீது, சாராயம் விற்பனை, கடத்தல் வழக்குகள் உள்ளன. அவரை கைது செய்ய, நேற்று, கெங்கவல்லி போலீசார், வீட்டுக்கு சென்றனர். அவர் இல்லாததால் சோதனை செய்தனர். வீட்டின் வெளிப்புற கழிப்பறையில், நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிந்தது. துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான மணியை தேடுகின்றனர்.
மது விற்ற பெண்
ஏற்காடு போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, கீரைக்காட்டை சேர்ந்த மலர்கொடி, 62, வீட்டில் சோதனை நடத்தி, 62 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அதேபோல், ஜெரீனாக்காட்டை சேர்ந்த ராமு, 63, வீட்டில், 50 மது பாட்டில்களை கைப்பற்றினர். இருவரையும், ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று எச்சரித்தனர்.