''உள்ளாட்சி பிரதிநிதிகள் உழைத்தால் இன்னும், 20 ஆண்டுகளுக்கு, ஸ்டாலின் முதல்வராக இருப்பார். உங்கள் உழைப்பு, முதல்வருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும்,'' என்று நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் நேரு பேசினார்.
நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநாட்டில் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரும், தி.மு.க., முதன்மை செயலாளருமான நேரு பேசியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளில், எந்த திட்டம் செயல்படுத்தினாலும், டெண்டர் மட்டும் விட்டும், பணியை செய்யாமல் ஆட்சி நடந்தது. ஆனால் கடந்த ஓராண்டில், ஏராளமான பணிகள் நடந்துள்ளன. உள்ளாட்சியில் எப்படி செயல்பட வேண்டுமென்பதற்கு, முதல்வர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். சென்னை மாநகராட்சிக்கு மட்டும், மழைநீர் வடிகால் திட்டத்துக்காக, 900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான், 63 சதவீதம் பேர் நகர்புறத்தில் வசிக்கின்றனர். நீங்கள் உழைத்தால் இன்னும், 20 ஆண்டுகளுக்கு, ஸ்டாலின் முதல்வராக இருப்பார். உங்கள் உழைப்பு, முதல்வருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். இவ்வாறு நேரு பேசினார்.
நீர் வளத்துறை அமைச்சரும், பொது செயலாளருமான துரைமுருகன் பேசியதாவது: முதல்வர் கோடி, கோடியாக நிதி ஒதுக்கினாலும், அவர் பணி செய்ய முடியாது. உத்தரவு போடலாம். ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினர்தான் பணி செய்ய வேண்டும். நான் பார்த்து மலைத்துப் போன தலைவர் என்றால், அவர் முதல்வர் ஸ்டாலின். ஓய்வென்றால் என்னவென்றே தெரியாத தலைவர். அகில இந்திய அளவில் மட்டும் அல்ல, உலக அளவில் பெருந்தலைவராக ஸ்டாலின் வருவார். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.