''நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை அளித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது,'' என, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேசினார்.
தர்மபுரி மாவட்டத்தில், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, தே.மு.தி.க., சார்பில் தர்மபுரி அருகே பாளையம்புதுாரில், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் பாளையம்புதுார், தொப்பூர், அகரம், வெள்ளக்கல் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலமின்றி, வாகன விபத்தில் பலர் இறக்கின்றனர். இதை தடுக்க மாநில அரசு, மத்திய அரசு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மபுரி உட்பட, 38, தி.மு.க.,-எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை, மத்திய அரசிடம் வலியுறுத்துவதில்லை.
ஒகேனக்கல் திட்டத்தை செயல்படுத்தியதாக கூறும் தி.மு.க., தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டாமல் உள்ளது.
கடந்த தேர்தலில் நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.