காரிப்பட்டி அருகே, ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில், 66 பவுன் தங்க நகை, 1.38 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே, மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சின்னதம்பி, 62; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ராஜாமணி. இவர்களது இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.
தம்பதியர் மட்டும் வீட்டில் வசிக்கின்றனர். கடந்த, 27ம் தேதி காலை, பழநி முருகன் கோவிலுக்கு சென்றனர். நேற்று காலை திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு, வீடு திறந்து கிடந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 66 பவுன் தங்க நகை, 1.38 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. சின்னதம்பி புகாரின்படி, காரிப்பட்டி போலீசார் விசாரித்தனர். மோப்ப நாய் சோதனை, கைரேகை நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இச்சம்பவம் காரிப்பட்டி பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.