அன்னுார்:'நெடுஞ்சாலையில் உள்ள ஆக்ரமிப்புகளை நாளைக்குள் அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டு வருகிறது.நெடுஞ்சாலைத்துறை அன்னுார் கோட்ட அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை:அன்னுார் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையில், ஆக்ரமித்து கடை நடத்துபவர்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, விபத்து ஏற்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவிநாசி-- மேட்டுப்பாளையம் சாலையில், ஜீவா நகர் முதல் நாகமாபுதுார் வரையிலும், தென்னம்பாளையம் சாலையில் சொக்கம்பாளையம் பிரிவு வரையிலும், ஓதிமலை மற்றும் சிறுமுகை சாலையில் பேரூராட்சி பகுதி வரையிலும், அனைத்து வகை ஆக்ரமிப்புகளும், ஜூலை 7ம் தேதி அகற்றப்பட உள்ளது. எனவே, மேற்படி சாலையில் ஆக்ரமிப்பு செய்துள்ளவர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதியை பொதுப் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு சரி செய்ய வேண்டும். நாளைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதற்கு ஏற்படும் செலவினங்களும் ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் இதுகுறித்த அறிவிப்பை கடந்த இரண்டு நாட்களாக மெயின் ரோடு, அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் ஓதிமலை ரோட்டில் ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். அறிவிப்பை தொடர்ந்து, சத்தி ரோடு, அவிநாசி ரோடு சந்திப்பில் உள்ள சில கடைகளில் முன்புற ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்களே அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சியின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.