குன்றத்துார் : குன்றத்துாரில், ஏ.டி.எம்., மைய குப்பை தொட்டியில், 43 சவரன் நகைகளை வீசிச் சென்ற சம்பவத்தில், கண்காணிப்பு கேமரா வாயிலாக, உரியவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன.குன்றத்துார் முருகன் கோவில் சாலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்திலுள்ள குப்பை தொட்டியில், நேற்று காலை கைப்பை ஒன்று கிடந்தது. அதில், நகைகள் இருந்தன. ஏ.டி.எம்., மைய காவலர் கோதண்டம் இதை கவனித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.குன்றத்துார் போலீசார் அந்த கை பையை கைப்பற்றி சோதனை செய்த போது, 43 சவரன் நகைகள் இருந்தன. இதையடுத்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, ஏ.டி.எம்., மையத்திற்கு, 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தது பதிவாகி இருந்தது.மேலும், அப்பெண் குப்பை தொட்டியில் கை பையை வீசிச் சென்றது தெரிந்தது.
அப்பெண் குறித்து, குன்றத்துார் போலீசார் விசாரித்தனர். அதே நேரம், குன்றத்துாரைச் சேர்ந்த, 35 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போனதாகவும், பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்ததும் போலீசாருக்கு தெரிந்தது.இதில் சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து, கண்காணிப்பு கேமரா காட்சியை காண்பித்தனர். அந்த காட்சியில் இருப்பது தங்களது மகள் என, அவர்கள் உறுதி செய்தனர்.
மேலும், அப்பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததும், துாக்கத்தில் எழுந்து வரும் போது, வீட்டில் இருந்த நகையை பையில் எடுத்து வந்து, குப்பை தொட்டியில் போட்டதும் தெரிந்தது. இதையடுத்து, நகைகளை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். உரிய நேரத்தில் தகவல் தெரிவித்து, நகையை ஒப்படைத்த ஏ.டி.எம்., காவலாளியையும் பாராட்டினர்.