மத்திய அரசு கல்வி வாரியம் மற்றும் 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் இணைந்து நடத்திய 'சி.பி.எஸ்.இ., கோடிங் சேலஞ்ச் - 2022' என்ற போட்டியை நடத்தின.நடப்பு 21ம் நுாற்றாண்டில், அன்றாட வாழ்வில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைக்கு புதிய முறையில் தீர்வு காணுதல் என்ற தலைப்பில் போட்டி நடந்தது.இதில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள சிவானந்தா ராஜாராம் சீனியர் செகண்டரி பள்ளியின் சி.பி.எஸ்.இ., வழியில் ஆறாம் வகுப்பு படிக்கும் செ.முகிலன், பள்ளி சார்பாக பங்கேற்றார்.
முகிலன், பார்வையற்றோருக்கு விழியாக இருக்கக்கூடிய, சிரமுமின்றி சரியான பாதையில் செல்வதற்கு வசதியாக நவீன கைத்தடியை அறிமுகப்படுத்தினார்.இந்திய அளவில் நடந்த இப்போட்டியில் பங்கேற்று, இரண்டாம் பரிசை பெற்ற முகிலனுக்கு, பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாணவர் முகிலன் கூறியதாவது:பார்வை குறைபாடு உள்ளோருக்கு சிறிய நவீன கைத்தடியை உருவாக்கினேன். செல்லும் பாதையில் ஏதேனும் தடைகள் இருந்தால், பார்வையற்றோருக்கு அபாய ஒலி எழுப்பும். மேலும் எந்த திசை நோக்கி செல்கின்றனர் என்பதையும், கைத்தடி தெரியப்படுத்தும்.பார்வையற்றோருக்காக உதவியாக இதை உருவாக்கியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
'ரோலர் ஸ்கேட்' கூடைப்பந்து கூட்டமைப்பு கோப்பை போட்டி, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்தது.இதே பள்ளியில் சி.பி.எஸ்.இ., வழியில் எட்டாம் வகுப்பு பயிலும் வி.ஹரிசாரதவர்ஷன், 'ரோலர் ஸ்கேட்' கூடைப்பந்து போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார். இம்மாணவனுக்கு, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.