வத்தலக்குண்டு : குடியிருப்பில் மின்னழுத்த ஒயர், குடிநீர் வந்தாலும் குடிக்க முடியாத நிலை என,வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் குன்னுவராயன்கோட்டை ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
கண்ணாபட்டி காலனி, மீனாட்சிபுரம், உச்சப்பட்டி, சமத்துவபுரம், அய்யன்கோவில்பட்டி, வடிவேல்புரம், கரட்டுப்பட்டி கிராமங்களை உள்ளடக்கிய, இந்த ஊராட்சியின் தாய் கிராமமான கண்ணாபட்டி வைகை ஆற்றில் கரையில் அமைந்துள்ளது இருந்தபோதிலும் இரு நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் கிடைக்கிறது. இதேபோன்று உச்சப்பட்டியில் தண்ணீர் கிடைத்தாலும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. நல்ல தண்ணீர் வழங்கவும் தெருவிளக்குகள் பொருத்த வேண்டும் என்பது ஊராட்சி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
பால்வாடிக்கு இல்லை இணைப்பு
ராமு, கண்ணாபட்டி: ஊரெல்லாம் கழிவு நீர் குறுக்கும், நெடுக்கமாக ஓடி சுகாதார சீர்கேடாக இருந்தது. மூன்று ஆண்டுகளில் அனைத்து தெருக்களுக்கும் பேவர் பிளாக் கற்கள் பதித்து கழிவுநீர் சாக்கடை கட்டியதால் பிரச்னை தீர்ந்தது. தற்போது அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இங்குள்ள பால்வாடிக்கு இணைப்பு வழங்காததால் பால்வாடி குழந்தைகளுக்கு சமையல் செய்ய தண்ணீர் பிரச்னை உள்ளது. சில பகுதிகளில் அதிகமாகவும் சில பகுதிகளில் குறைவாகவும் தண்ணீர் கிடைக்கிறது.
இணைப்பு தர மறுப்பு
கவுசல்யா, காலனி: எங்கள் பகுதியில் உயிர் மின்னழுத்த வயர் செல்கிறது. இதனால் வயருக்கு அடியில் வீட்டுமனை கிடைத்தவர்கள் வீடு கட்ட முடியாமல் தவிக்கின்றனர். வீடு கட்டியவர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கவில்லை. மின்வாரியத்தில் கேட்டால் உயர் மின்னழுத்த வயர் அடியில் வீடு கட்டியவர்களுக்கு இணைப்பு வழங்க இயலாது என தட்டிக் கழிக்கின்றனர். அரசு துறைகளுக்கு மனு கொடுத்தும் பலனில்லை.
தெருவிளக்கு சரியாக எரிவதில்லை.
மாரிச்சாமி, உச்சப்பட்டி: மருதாநதி கரையோரம் எங்கள் ஊர் இருந்தாலும், குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் கிடைக்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி உள்ளோம். அதேபோன்று தெருவிளக்கு சரியாக எரிவதில்லை. மூன்று விளக்குகளை தவிர மற்ற விளக்குகள் எரியவில்லை.