திருக்கோவிலுார : திருக்கோவிலுார் அருகே தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அக்கா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த பொருவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி மலர், 36; கணவரால் கைவிடப்பட்டவர். இவருக்கு 20 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
தனது அக்கா பொன்னம்மாள் பாதுகாப்பில் வசித்து வந்தார்.இவர், கடந்த 27ம் தேதி பெருமணம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்குச் சென்றவர், மணலுார்பேட்டை பங்க் அருகே மயங்கிய நிலையில் கிடப்பதாக பொன்னம்மாளுக்கு தகவல் கிடைத்தது.உடன், அவர் மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் நிலை மோசமானதால், வீட்டிற்கு அழைத்து வரப்பட்டவர் 29ம் தேதி இறந்தார். அன்றே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக நேற்று முன்தினம் பொன்னம்மாள் அளித்த புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.மேலும், தனது தங்கையின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மலர் மனு அளித்தார்.