நாளை ஆனி திருமஞ்சன விழா
சென்னிமலை, ஜூலை 5--
சென்னிமலையில், ஆனி திருமஞ்சன விழா நாளை நடக்கிறது.
சென்னிமலை, கிழக்கு ராஜவீதி கைலாசநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா, திருக்கணித வாசன் பஞ்சாங்கப்படி நாளை உத்திர நட்சத்திரம் வருவதால், நாளை காலை, 10:00 மணிக்கு ஆனி திருமஞ்சன விழா துவங்குகிறது. இதை முன்னிட்டு உற்சவர் நடராஜ பெருமான், கைலாசநாதருக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின் அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. முக கவசம் அணிந்து பக்தர்கள் பங்கேற்கலாம் என்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ஈரோடு, ஜூலை 5-
ஈரோடு மாவட்ட வக்கீல்கள், நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி, இரணியல் பகுதியில், வக்கீல் ஜெயராம் மீது, கைதியின் வாக்குமூலம் பெற்று இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்தும், பொய் வழக்குகளில் இருந்து விடுவிக்க கோரியும், சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், அவருக்கு ஆதரவாக செயல்படும் குளச்சல் டி.எஸ்.பி.,யை இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்து, இரணியல் வக்கீல் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, கொடுமுடி, பெருந்துறை நீதிமன்றங்களில் வக்கீல்கள், நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை
பெருந்துறை, ஜூலை 5-
காஞ்சிக்கோவில் கொங்கு வேளாளர் கல்வி நிறுவனம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதற்கு காரணமான ஆசிரியர்களை பாராட்டி, ஊக்கத்தொகை நேற்று வழங்கினர்.
பள்ளியில் வணிகவியல், கணினி பயன்பாடு, கணக்கு பதிவியல், பொருளியல், அறிவியல் பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.
பள்ளி தலைவர், பொருளாளர், செயலாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 30 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு, ஜூலை 5-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்து, 149 பேர் சிகிச்சையில் இருந்தனர். நேற்று, 30 பேருக்கு கொரோனா உறுதியானது.
அதேசமயம் சிகிச்சையில் இருந்த ஏழு பேர் குணமடைந்தனர். தற்போது, 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவரை இடித்ததற்கு எதிர்ப்பு
ஆக்கிரமிப்பா? இல்லையா?
சத்தியமங்கலம், ஜூலை 5-
சத்தியமங்கலத்தில் பவானி ஆற்று பகுதியை ஒட்டிய இடத்தில், தனி நபர் ஒருவர் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளார். நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக கூறி, நகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சுவரை நேற்று இடித்தனர்.
இதையறிந்த சுவர் கட்டிய நபர் விரைந்தார். முன்னறிவிப்பின்றி இடித்தது தவறு என்று கூறி, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். சத்தி டி.எஸ்.பி., ஜெயபாலன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய ஆவணங்களை காட்டி, நகராட்சி அதிகாரிகளிடத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தவே, தனி நபரும் அவரது ஆதரவாளர்களும் கலைந்து சென்றனர். விபத்தில் கூலி தொழிலாளி சாவு
அந்தியூர், ஜூலை 5--
பவானி, வர்ணபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 42; கூலி தொழிலாளி. சத்தியமங்கலத்தில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு, நேற்று முன்தினம் மாலை, ஆக்டிவா மொபட்டில் புறப்பட்டார்.
அவருடன் மனைவி, இரண்டு பெண் குழந்தைகளும் சென்றனர். ஆப்பக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, மொபட் தடுமாறியதில், நான்கு பேரும் விழுந்தனர்.
இதில் வெங்கடேஷ் தலையில் பலத்த காயமடைந்தார். மற்ற மூவரும் லேசான காயத்துடன் தப்பினர். அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வெங்கடேஷ் நள்ளிரவில் இறந்தார்.
'மையம் சென்றும் ஏமாற்றம்'
உயிரை 'பறித்த' குடிபோதை
சென்னிமலை, ஜூலை 5-
குடிபோதை மறுவாழ்வு மையத்துக்கு சென்றும் தொடர்ந்த பழக்கத்தால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னிமலையை அடுத்த ஈங்கூர், சரவம்பதியை சேர்ந்தவர் ரவீந்திரன், 32; இவரது மனைவி சுகுணா. இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். தம்பதிக்கு எட்டு வயதில் மகன் உள்ளார். ரவீந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மது அடிமை மறு வாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனாலும், ரவீந்திரன் குடித்துவிட்டு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் சுகுணா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த ரவீந்திரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.