கொடிவேரி தடுப்பணையில், கேட்பாரற்று நின்ற கார், உரியவரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
கொடிவேரி தடுப்பணைக்கு, கடந்த மாதம், ௨௫ம் தேதி இரு ஆண்கள், ஒரு பெண் ஸ்கோடா காரில் வந்தனர். திரும்பி செல்ல காரை இயக்கியபோது, முன்னோக்கி நகர்ந்து, எதிரேயிருந்த சுடுகாட்டு கம்பி வேலி மீது மோதியது. கம்பி வேலி மற்றும் தாங்கி நின்ற கருங்கல் விழுந்து சேதமடைந்தது. இதனால் இழப்பீடு வழங்காமல், கார் சாவியை ஒப்படைத்துவிட்டு மூவரும் சென்றனர். அவர்கள் வராததால் கடந்த ஒன்பது நாட்களாக, கேட்பாரற்று நின்றிருந்தது.
இந்நிலையில் காரின் உரிமையாளர் எனக்கூறி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த, மூர்த்தி, கொடிவேரி தடுப்பணைக்கு நேற்று காலை வந்தார். அவர், ௧௦ ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தந்ததால், கடத்துார் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, கார் சாவியை அவரிடம் ஒப்படைத்ததாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.