ஓடும் ரயிலில், எட்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான, வைர நகை திருடிய, ஈரோடு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் கோபகுமார். தாய் பங்கஜா நாயர், 76; இருவரும் கேரளாவுக்கு சென்றனர். அங்கிருந்து மார்ச், 28ல் கொச்சுவேலி--மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருவுக்கு 'ஏசி' பெட்டியில் பயணித்தனர். பங்கஜா நாயர் வைத்திருந்த கைப்பை, ஈரோட்டை தாண்டி ரயில் சென்றபோது காணவில்லை. அதில், 8.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகை, 8.5 பவுன் நகை, 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போன், வாட்ச் வைத்திருந்தார். பெங்களூரு சென்ற நிலையில், அங்கு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் கோபகுமார் புகாரளித்தார். அவர்கள் விசாரணைக்குப் பிறகு, கடந்த மே மாதம், ஈரோடு ரயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக, ஈரோடு, ரயில்வே காலனி, குமரன் நகரை சேர்ந்த பைசல், 29, என்பவரை நேற்று போலீசார், கைது செய்தனர். அவரிடம் வைர நகை, 6 கிராம் நகை, ஒரு மொபைல்போன், வாட்ச்சை கைப்பற்றினர்.