''அ.தி.மு.க.,வின் வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறினார்.
தர்மபுரியில் நேற்று நடந்த, அ.ம.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவின் எண்ணங்களை, 100 ஆண்டுகளுக்கு கொண்டு செல்லும் வகையில், அ.ம.மு.க., தற்போது செயல்பட்டு வருகிறது. தேர்தலின் போது கொடுத்த பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல், நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் என்ற வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்து, ஓராண்டை கடந்தும், தி.மு.க., அரசு நிறைவேற்றாமல் உள்ளது. இந்த ஆட்சியில் இளைய தலைமுறையினர் பாதிக்கும் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.,வில் தற்போது அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை இல்லை, 100 தலைமை வந்தாலும், இனி அதன் வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. கடந்த
உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்திலேயே, அ.தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது. பழனிசாமியால், அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க முடியாது. பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தவரையே அவர் மதிக்கவில்லை. அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது, அவருடன் தற்போது உள்ளவர்களுக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் அமைப்பு செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் முத்துசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.