''சுற்றுச்சூழல் மேம்பாடு, வனப்பரப்பு அதிகரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும், 3 மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
தெரிவித்தார்.
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை நேற்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம்
கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள வனப்
பரப்பினை, 10 ஆண்டுகளில், 33 விழுக்காடாக உயர்த்த பசுமை தமிழ்நாடு என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 2022 --23ம் ஆண்டில், 2.50 கோடி நாற்றுகள் நட்டு வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டில் இருந்து, ஒவ்வொரு ஆண்டுக்கும், 32 கோடி மரங்கள் நடப்படும். மாவட்டத்திற்கு, 3 கோடி மரம் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் வனப்பரப்பு அதிகரிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், 3 இடங்களில் வனத்துறையின் சார்பாக, ஒரு கிராம பகுதியில், ஒரு ஹெக்டர் பரப்பளவில் மரகதப் பூஞ்சோலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யானைகள் கணக்கெடுப்பு
கடந்த, 2015 ஆண்டு புலிகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது, 1,600 புலிகள் இருந்துள்ளன. யானைகளை கணக்கே எடுக்க முடியாது. அதில் இருக்கும் சிரமம் என்னவென்றால் யானை தினமும், 100 முதல், 150 கிலோ மீட்டர் நடக்கும். வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும், இங்கிருந்து வடமாநிலங்களுக்கும் செல்லும். மாறி மாறி சென்று கொண்டே இருக்கும் என்பதால் கணக்கு எடுக்க முடியாது.
யானை எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்ற கருத்துள்ளது. யானை அகழிகள் வெட்ட அனைத்து மாவட்டத்திற்கும் பொக்லைன் வாங்கி கொடுக்கப்படும். மரத்தை வெட்டி மற்றும் வனத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் தேவைகள் அடிப்படையில் சாலை அமைக்கப்படுகிறது. மலைவாழ் மக்கள் கல்வி கற்க தேவையான நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.
ரூ.8 கோடி ஒதுக்கீடு
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், 24 வகையில், 218 எண்ணிக்கையிலான பல்வேறு வன விலங்கினங்கள் உள்ளன. மேலும், புலி, சிறுத்தை, கரடி, காட்டு மான், நீர் பறவைகள் என இல்லாத இனங்களையும் கொண்டு வந்து சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த. 2019-20ம் ஆண்டு பூங்காவிற்கு, 2.50 லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். 2020--21ம் ஆண்டில் கொரோனா காரணமாக, 87 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். 2021--22ம் ஆண்டு 1.41 லட்சம் பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
பூங்காவின் வனப்பரப்பை, 131.73 ஹெக்டராக அதிகரிக்க, 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு இல்லாத உயிரினங்களை பிற வன உயிரியல் பூங்காக்களில் இருந்து கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. ராஜேந்திரன், சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.