ஓசூர் வழியாக லாரியில் கடத்திய, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., பூபதி ராமராஜூலு மற்றும் போலீசார், பூனப்பள்ளி சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தமிழகம் நோக்கி வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், துணி பண்டல்களுக்கு இடையே பதுக்கி வைத்து, 62 மூட்டைகளில் மொத்தம், 8 லட்சத்து, 4,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், காடையாம்பட்டியை அடுத்த ஜோடுகுழியை சேர்ந்த டிரைவர் மணி, 29,
என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து, சேலம் மாவட்டத்திற்கு புகையிலை பொருட்களை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, டிரைவர் மணியை கைது செய்த போலீசார், 1,639 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், லாரி உரிமையாளரான சேலத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.