கோவை மாவட்டத்தில் பட்டா பெயர் மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு, 'கூகுள் பே'யில் லஞ்சம் வாங்கும் அளவுக்கு, வருவாய்த்துறை டிஜிட்டல் மயமாகியுள்ளது.கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொழில் வளர்ச்சி காரணமாக, மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதால், கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடந்து வருகிறது.
இதனால் நிலத்தின் தேவையும், மதிப்பும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நிலம் வாங்குவது, விற்பது, பட்டா பெயர் மாற்றுவது போன்ற பணிகளுக்காக, பொது மக்கள் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அலுவலகங்களை நாடுவதும் அதிகரித்துள்ளது.இந்த அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான் என்றாலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பட்டா கொடுப்பதற்கும், பெயர் மாற்றுவதற்கும் மிகத்துணிச்சலாக லஞ்சம் வாங்கப்படுகிறது. எந்த அலுவலகத்திலும், மக்களிடம் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கீழ் நிலையிலுள்ள அலுவலர்கள் யாரும் லஞ்சம் வாங்க பயப்படுவதேயில்லை. இதன் உச்சமாக,லஞ்சத்தை 'கூகுள் பே' மூலம் அனுப்பச் சொல்லும் அளவுக்கு, கோவை மாவட்ட வருவாய்த்துறை டிஜிட்டல்மயமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஆதாரங்கள் கொடுக்கப்பட்டாலும், எந்த அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றுவதிலேயே, பெரிய அதிகாரிகள் குறியாகவுள்ளனர்.கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிங்காநல்லுார் உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் தண்டல்காரராகப் பணியாற்றும் அருளானந்தம் என்பவர், பட்டா பெயர் மாற்றித்தருவதாகவும், பத்திர நகல்களை எடுத்துத்தருவதாகவும் கூறி, பலரிடம் பணம் பெற்ற தகவல் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு எந்த வேலையையும் அவர் செய்து கொடுக்கவில்லை.இதில் நிர்மலா என்ற பெண்ணிடம் வாங்கிய, 10 ஆயிரம் ரூபாயை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். மீனாட்சி என்ற பெண்ணிடம், மூவாயிரம் ரூபாய் ஒரு முறையும், 20 ஆயிரம் ரூபாய் ஒரு முறையும் என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை 'கூகுள் பே' மூலமாக வாங்கியுள்ளார்.
இதுபற்றி அருளானந்தத்திடம் கேட்டதற்கு, ''அந்தப் பெண்ணுக்கு நாளை பத்திர நகல் வந்து விடும். அல்லது பணம் திருப்பிக் கொடுக்கப்படும்,'' என்றார்.தெற்கு தாலுகாவுக்குட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்தில், 'கூகுள் பே' மூலமாக லஞ்சம் வாங்கப்படுவது பற்றி, கோவை தெற்கு தாசில்தார் சரண்யாவிடம் கேட்டதற்கு, ''மக்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. இப்படி யாராவது பணம் கேட்பதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கிறோம். உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அருளானந்தம் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்-நமது நிருபர்-.