கூடலுார்:கூடலுார் ஓவேலி பகுதியில், மான் வேட்டையில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் வீட்டில் காலி தோட்டாக்கள், வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.நீலகிரி, கூடலுார் குண்டபுழா வனப்பகுதியில், கடமான் வேட்டையில் ஈடுபட்ட பால்மேட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் 38, ஓவேலி புஷ்பராஜ் 33, மைக்கேல் 30, அருண் 26, ஆகியோரை, தேவாலா போலீசார் கைது செய்து, கடமான் இறைச்சி, நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், கூடலுார் டி.எப்.ஓ., கொம்மு ஓம்காரம் உத்தரவுப்படி, உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன், வனச்சரகர் சதாம் உசேன்கான், வன ஊழியர்கள், முதுமலை மோப்பநாய் உதவியுடன், கைதானவர்கள் வீட்டில் சோதனையிட்டனர்.புஷ்பராஜ் வீட்டிலிருந்து, வேட்டைக்கு பயன்படுத்திய, 17 காலி தோட்டாக்கள், 250 கிராம் வெடிமருந்து பவுடர், டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள், வெடி மருந்து ஆகியவை போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். வனவிலங்கு வேட்டை, குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.