பம்மல்:பம்மலில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 10 பேரை, போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர். 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குரோம்பேட்டை, திருமங்கையாழ்வார்புரத்தில், நேற்று முன்தினம் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக, சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சேவல் சண்டையில் ஈடுபட முயன்ற திருநீர்மலையைச் சேர்ந்த அருள், 34, உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அதேபோல், அனகாபுத்துார், அருண்மதி தியேட்டர் அருகே சேவல் சண்டையில் ஈடுபட முயன்ற நான்கு பேரையும் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின், 10 பேரையும் எச்சரித்து, காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இது தொடர்பாக, சங்கர் நகர் போலீசார், 19 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.