ஜி.ஐ.எஸ்., முறையில் துணை மின் நிலையம்நங்கநல்லுார் மக்கள் எதிர்பார்ப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
ஜி.ஐ.எஸ்., முறையில் துணை மின் நிலையம்நங்கநல்லுார் மக்கள் எதிர்பார்ப்பு
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 

நங்கநல்லுார் சுற்று வட்டாரப் பகுதிகளில், நிலவும் மின் வினியோகப் பிரச்னைக்கு, ஜெர்மன் தொழில்நுட்பத்திலான ஜி.ஐ.எஸ்., எனப்படும், 110 கி.வோ., துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம் நங்கநல்லுார், 100 அடி சாலையில், 33 கி.வோ., துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. அங்கிருந்து, நங்கநல்லுார், பழவந்தாங்கல், மூவரசம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு, மின் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த, 20 ஆண்டுகளில் இப்பகுதியில், மின் நுகர்வோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களின் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
நங்கநல்லுாரில் உள்ள, 33 கி.வோ., துணை மின் நிலையம், 110 கி.வோ., துணை மின் நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. இதை செயல்படுத்தவும், மின் வாரியம் திட்டமிட்டது. பழைய தொழில்நுட்பத்தின்படி, 110 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்க குறைந்த பட்சம், 10 கிரவுண்டு நிலம் தேவைப்படுகிறது. உரிய இடம் கிடைக்காததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இடப்பிரச்னைக்கு தீர்வாக நவீன தொழில்நுட்பமாக ஜி.ஐ.எஸ்., எனப்படும், 'காஸ் இன்ஸ்சுலேடட் சப் - ஸ்டேஷன்' அமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:நங்கநல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின் வினியோகப் பிரச்னைகள் எழுந்து வருகின்றன.நங்கநல்லுார் பகுதியில், 110 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
இடப்பற்றாக்குறையை காரணம் காட்டி அத்திட்டத்தை மின்வாரியம் கிடப்பில் போட்டுள்ளது. ஆனால், தற்போது உள்ள ஜி.ஐ.எஸ்., எனும் ஜெர்மன் தொழில்நுட்பத்தின் படி, 110 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்க மூன்று கிரவுண்டு நிலம் இருந்தால் மட்டும் போதுமானது. ஜி.ஐ.எஸ்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து மின்வாரிய தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- -நமது நிருபர்- -


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X