மதுரை : மதுரையில் ஆவின் பாலகங்களில் விதிமீறி டீ, ஸ்நாக்ஸ் விற்பனை ஜோராக நடக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை இல்லை என புகார் எழுந்துள்ளது.மதுரை நகரில் மாநகராட்சி இடங்களில் 50 ஆவின் பாலகங்கள்செயல்படுகின்றன. இங்கு ஆவின் தயாரிப்பு பால் பொருட்கள் மட்டும் விற்க வேண்டும் என்பது விதி. அமைச்சர் நாசரும் எச்சரித்திருந்தார்.
ஆனால் பழங்காநத்தம், மாட்டுத்தாவணி, விளாங்குடி, ஆரப்பாளையம், தெற்குமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் பாலகங்களில் சிகரெட், வடை, முறுக்கு, அதிரசம், பப்ஸ் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகள் விற்பனையாகின்றன. தடுக்க வேண்டிய ஆவின் மண்டல, விற்பனை மேலாளர்கள் கண்டுக்கொள்வதில்லை. இதனால் ஆவின் பொருட்கள் விற்பனை பாதிக்கிறது.முகவர்கள் கூறுகையில், "பாலகங்களில் அதிகம் விற்பனையாகும் தயிர், மோர், ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்ட பொருட்களை ஆவின் சரியாக சப்ளை செய்யவதில்லை.
மாநகராட்சிக்கு வாடகை செலுத்துவது திண்டாட்டமாக உள்ளது. இதை சமாளிக்க ஸ்நாக்ஸ் விற்கிறோம். ஆவின் பொருட்கள் முறையாக சப்ளை செய்ய வேண்டும். நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள்சிலர் பாரபட்சமாக செயல்படுவதும் தவிர்க்க வேண்டும்" என்றனர்.ஆவின் பொது மேலாளர் சாந்தி கூறியதாவது:பாலகங்களில் ஆவின் பொருட்களை தவிர பிற பொருட்கள் விற்பனை செய்தால் முகவரின் உரிமம் ரத்து செய்யப்படும். ஆவின் விழிப்புணர்வு குழு ஆய்வு அறிக்கையின் பேரில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் டெப்போ எண்: 910ன் முகவர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. குற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.