தண்டராம்பட்டு:தண்டராம்பட்டு அருகே அரசு பள்ளியில், மேற்கூரையின் சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்ததில், மூன்று மாணவர்கள், ஆசிரியர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தரடாப்பட்டில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.நேற்று மதியம், 6ம் வகுப்பு மாணவர்கள் சிலர், உடற்கல்வி ஆசிரியர் தினகரனுடன் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, திடீரென சீலிங்கில் உள்ள சிமென்ட் பூச்சு திடீரென இடிந்து விழுந்தது.
இதில், மாணவர்கள் அலறியடித்து வகுப்பறையிலிருந்து ஓட்டம் பிடித்தனர். ஜனார்த்தனன், தருண்குமார், முகேஷ் ஆகிய மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் தினகரன் ஆகியோர் மீது சிமென்ட் பூச்சு விழுந்ததில் காயமடைந்தனர்.அவர்கள், செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், முகேஷ், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தண்டராம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.