ஆலந்துார் :ஆலந்துார் மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில், நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. வார்டு வாரியாக அவற்றை மீட்டு, சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆலந்தார் நகராட்சியுடன் நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய பேரூராட்சிகள், ஊராட்சிக்கள் இணைக்கப்பட்டு சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம் உருவாக்கப்பட்டது.இதனால், ஆலந்துார், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, நங்கநல்லுார், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் நடைபாதை வசதிகள் அதிகம் காணப்படுகின்றன. மற்ற பகுதிகளில் சில இடங்களில் மட்டும் உள்ளன.ஆலந்துார் மண்டலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே முறையான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல தெருக்களில் மழைநீர் வடிகால் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் நடைபாதை ஓரு மீட்டருக்கும் குறைவாக குறுகி, பெயரளவிற்கு உள்ளது. பிரதான பகுதிகளில் உள்ள அகலமான நடைபாதைகள் பெரும்பாலும் சிறு வியாபாரிகள், சாலையோர உணவகங்கள், சலவை வண்டிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.வர்த்தக நிறுவனங்கள் உள்ள சாலை நடைபாதைகள், வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ஆடுக்குமாடி குடியிருப்புகளால் நடைபாதை, சாலை ஆக்கிரமித்து சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நடைபாதைகள் முறையான பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆலந்துார் மண்டலத்தில் வார்டு வாரியாக நடைபாதைகளை பார்வையிட்டு, அவற்றை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, சீரமைக்க வேண்டும். தேவையான இடங்களில் நடைபாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.