அடையாறு, வடிகால் கட்ட பள்ளம் தோண்டும்போது, அதில் தேங்கும் கழிவு நீரை அகற்றாமல், கான்கிரீட் கலவை போட்டதால், வடிகால் தரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிஉள்ளனர்.அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இதில் வேளச்சேரி, கிண்டி, அடையாறு, கோட்டூர்புரம், தரமணி பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும்.இதை தடுக்க, முதற்கட்டமாக 120 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் கட்டும் பணி நடைபெறுகிறது. பணியை வேகமாக முடிக்க, மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.இதற்காக, சில பகுதிகளில் அவசர கோலத்தில், தரம் இல்லாமல் வடிகால் கட்டப்படுகிறது. பள்ளம் தோண்டும்போது, குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர், கழிவு நீர் வெளியேறி பள்ளத்தில் தேங்கி நிற்கும்.சேதமடைந்த குழாயை சரி செய்து, பள்ளத்தில் தேங்கிய நீரை வெளியேற்றி, கான்கிரீட் கலவை போட வேண்டும். ஆனால், கிண்டி, வேளச்சேரி பகுதியில், கழிவு நீரை அகற்றாமல் அதோடு சேர்த்து கான்கிரீட் கலவை போடப்படுகிறது.இதனால், வடிகாலில் நீரோட்டம் அதிகரிக்கும்போது, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழும் சூழல் உள்ளது. நாளடைவில், வடிகால் தரமில்லாமல் ஆகிவிடாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.உயர்அதிகாரிகள் கண்காணித்து, உரிய தரத்துடன் வடிகாலை கட்டமைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.