திட்டக்குடி:சட்ட விரோத கருக்கலைப்பால் இளம்பெண் இறந்த வழக்கில், தேடப்பட்டு வந்த மருந்துக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி அனிதா, 27. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான அனிதாவிற்கு, மூன்றாவது குழந்தையும் பெண் என்பது 'ஸ்கேனிங்'கில் தெரிந்தது.இதனால் மே 5ல், கடலுார் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள ஓம்சக்தி மெடிக்கலில் கருக்கலைப்பு செய்ய அனிதா, கணவர் வேல்முருகனுடன் வந்தார்.
மெடிக்கல் உரிமையாளர் முருகன், அனிதாவிற்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சட்ட விரோத முறையில் கருக்கலைப்பு செய்தார்.இதில் அனிதாவின் உடல்நிலை மோசம் அடைந்ததால், முருகனின் காரில், பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்து விட்டு, முருகன் தப்பினார். அனிதா சிகிச்சை பலனின்றி மே 6ல் இறந்தார்.
அனிதாவின் தாய் செல்வி அளித்த புகாரின்படி, மெடிக்கல் உரிமையாளர் முருகன், 52, மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மீது ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.தலைமறைவாக இருந்த முருகனை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.