கோவை, : ராஜவீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கான, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.ஆண்டுதோறும் ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில், வரும் 10ம் தேதிக்குள், ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி, மாணவ மாணவியருக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், மாவட்டத்தில் 48 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் புவனேஷ்வரி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரசு பள்ளிகளை சார்ந்த தமிழ் ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனார்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், அண்ணாதுரை பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம் உட்பட பல தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.
கட்டுரைப் போட்டியில், ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஹேமலதா முதல் பரிசு, ஜே.கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சந்தியா இரண்டாம் பரிசு, சோமனுார் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மோனிஷா மூன்றாம் பரிசு வென்றனர்.பேச்சுப்போட்டியில் அன்னுார் கே.ஜி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நிவேதா முதல் பரிசு, திருச்சி ரோடு புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி இரண்டாம் பரிசு,
ஒண்டிப்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஜோன்ஸ் அலெக்ஸாண்டர் மூன்றாம் பரிசு பெற்றனர்.கட்டுரை மற்றும் பேச்சு போட்டி இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.