கோவை : கோவையில் தென்மேற்கு பருவமழை விட்டு, விட்டு பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே அதிகரிக்க துவங்கி உள்ளது. பொதுமக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கோவையில் தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பகுதிகளில் பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் அதிகம் பெருக்கம் அடைகின்றன.இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், மக்கள் தங்களுக்கு வந்துள்ளது கொரோனாவா, இல்லை டெங்கு காய்ச்சலா என, அச்சத்தில் தவிக்கின்றனர்.இது குறித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''கோவையில் காய்ச்சலுக்கு தினமும், 10-15க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
அதில் சிலர் அன்றே குணமடைந்து வீடு திரும்புகின்றனர். நோய் பாதிப்பு அதிகரித்தால், சமாளிக்க தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. காய்ச்சல் ஏற்பட்டால், சுயமாக மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்ன காய்ச்சல் என்பதை, மருத்துவர்தான் பரிசோதித்து முடிவு செய்ய முடியும்,'' என்றார்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது :
மழைக்காலம் என்பதால், பொதுமக்கள் வீட்டை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக பழைய டயர், பிளாஸ்டிக் குடங்கள், ஆட்டாங்கல் போன்ற மழை நீர் தேங்காமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சுகாதாரமற்ற வகையில் இருந்தால், உடனடியாக அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.