கோவை : சாலை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, சவுரிபாளையம் அருகே பாரதிபுரம் மக்கள் நேற்று, பட்டினி போராட்டம் நடத்தினர்.மாநகராட்சி, 51வது வார்டு சவுரிபாளையம் அருகே பாரதிபுரம், டேங்க் ரோடு வீதிகளில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் சாலை, குடிநீர் என அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்துதரவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் நேற்று பட்டினி போராட்டம் நடத்தினர்.மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அங்கு வந்த மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் மாரிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, குடிநீர் இணைப்பு பணிகள் துவங்கியதால் மதியம், 2:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.பாரதிபுரம் குடியிருப்போர் நலச்சங்க போராட்டக்குழுவை சேர்ந்த பரமசிவம் கூறுகையில், ''எங்கள் குடியிருப்பு பகுதிகளில், குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட ரோடுகளால் தினமும் விபத்து ஏற்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை, சாக்கடை என அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரவில்லை.வரும், 25ம் தேதி ரோடு போட்டுத்தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். குடிநீர் இணைப்பு பணிகள் உடனடியாக துவங்கியதாலும் போராட்டத்தை கைவிட்டுள்ளோம்,'' என்றார்.