பொள்ளாச்சி : 'கிராமப்புற பெண்கள், மாற்றுத்திறனாளிகளை, வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகளில் சேர்த்துவிட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்,' என, ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு நேற்று ஒன்றிய அலுவலகத்தில், ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., ஆனந்த் தலைமை வகித்தார், துணை பி.டி.ஓ.,க்கள் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., பேசியதாவது:தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் செயல்படுத்தப்படும், பண்ணைக்குட்டை, தடுப்பணை, 'சோக் பிட்', கிணறு அமைப்பது உள்பட அனைத்து திட்டங்கள் குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திட்டங்கள் முழுமையாக சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
விவசாயிகள், மக்களை சந்தித்து, அவர்களை திட்டங்களில் பதிவு செய்து விண்ணப்பங்களை ஒன்றியத்துக்கு அனுப்ப வேண்டும்.கிராமப்புற பெண்கள், மாற்றுத்திறனாளிகளை, வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகளில் சேர்த்து வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் கூலி, வேலை என அனைத்தையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, பேசினார்.