கோவை : பொள்ளாச்சியில், பா.ஜ., நடத்திய மாநாட்டுக்கு போட்டியாக, தி.மு.க., சார்பில் வரும் 15ல், ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது; முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
தி.மு.க., ஆட்சியின் தவறுகளை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தி வருவதால், பா.ஜ.,வுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. ஜூன் 19ல் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், தெற்கு மாவட்ட மாநாடு நடத்திய போது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இந்நிலையில், இதற்கு போட்டியாக, பொள்ளாச்சியில் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம் நடத்த, தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருக்கிறது. வரும், 15ம் தேதி பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிக்கான கூட்டத்தை, ஆச்சிப்பட்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, கட்சியினர் செய்து வருகின்றனர். 15 ஆயிரம் பேர் அமர இருக்கைகள் போடப்படுகின்றன.
கூட்டத்தில் பங்கேற்க, 14ம் தேதி இரவு, கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் 'கொடிசியா' வளாகத்தில், தொழில் முனைவோருடன் உரையாடுகிறார். பின், ஈச்சனாரி அருகே நடக்கும் அரசு விழாவில், 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி, முடிவுற்ற பணிகளை, மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்க உள்ளார்.கோவை வரும் முதல்வரை வரவேற்கவும், பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும், தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.