2023ல் திருமழிசை குத்தம்பாக்கத்தில் புது பஸ் நிலையம்: மேற்கு மண்டல பயணியருக்கு வரப்பிரசாதம் | சென்னை செய்திகள் | Dinamalar
2023ல் திருமழிசை குத்தம்பாக்கத்தில் புது பஸ் நிலையம்: மேற்கு மண்டல பயணியருக்கு வரப்பிரசாதம்
Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
 

திருமழிசை: சென்னை அடுத்த திருமழிசை குத்தம்பாக்கத்தில், 336 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கட்டப்பட்டு வரும் நான்காவது புதிய பேருந்து நிலைய பணிகள், துரித கதியில் நடந்து வருகின்றன. அனைத்து பணிகளையும் முடித்து, அடுத்த ஆண்டு ஜனவரியில், பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது, மேற்கு மண்டல பயணியருக்கு வரப்பிரசாதமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.latest tamil newsசென்னை மாநகரின் அசுர வளர்ச்சிக்கு ஏற்ப, அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், பிரதான சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வாக, 2002ம் ஆண்டு, கோயம்பேடில், புதிய புறநகர் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம், ஆசியாவிலேயே மிகப்பெரியது என்ற பெருமையை பெற்றது.

பிராட்வேயிலிருந்து, கோயம்பேடு பகுதிக்கு புறநகர் பேருந்து நிலையம் இடம் பெயர்ந்த பின், மாநகரில் ஓரளவு வாகன நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும், ஆண்டுகள் செல்லச் செல்ல, மாநகரில் மக்கள் தொகை, வாகன பெருக்கத்தின் காரணமாக, நெரிசல் மேலும் அதிகரித்தது.

இதையடுத்து, மாதவரம், வேளச்சேரியில், புதிய புறநகர் பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், மாதவரம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள், அங்கிருந்து இயக்கப்படுகின்றன.இதனால், கோயம்பேடில் இருந்து தினசரி திருமலை திருப்பதிக்கும், ஆந்திரா, தெலுங்கானாவின் பிற பகுதிகளுக்கும் புறப்பட்ட பேருந்துகள், தற்போது மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதால், கோயம்பேடில் ஓரளவு கூட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில், வேளச்சேரி பேருந்து நிலைய திட்டம் கைவிடப்பட்டு, தென் மாவட்ட பேருந்துகள் வந்து செல்ல, வண்டலுார், கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கரில் 417 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள், 2019ம் ஆண்டு துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை, குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, தமிழக அரசு, 2019ல் அறிவித்தது. மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, இத்திட்டம் உருவாக்கப்பட்டது.அங்கிருந்து வரும் பயணியர் மற்றும் அப்பகுதிகளுக்கு செல்லும் பயணியர், நான்காவதாக கட்டப்படும் குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை பயன்படுத்துகையில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இதன்படி, மாநில வீட்டுவசதி வாரியத்தின், திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இந்த நிலத்தில், 336 கோடி ரூபாயில், ஐந்து லட்சம் சதுர அடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், 2021 பிப்., மாதம் துவங்கின.

தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன.குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், மேற்கு மண்டலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் இயங்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே, மாதவரம் பேருந்து நிலையத்திற்கு, கோயம்பேடிலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் நிலையங்களுக்கும், கோயம்பேடில் இருந்தும், மாநகரின் முக்கிய பகுதிகளில் இருந்தும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துரித கதியில் நடந்து வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை, வரும் டிசம்பருக்குள் முடித்து, அடுத்த ஆண்டு ஜனவரியில், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக, சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் எனப்படும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறப்பு அம்சங்கள் என்ன?குத்தம்பாக்கம் நிலையத்தில், 70 புறநகர் பேருந்துகள், 30 ஆம்னி பேருந்துகள், 36 மாநகர பேருந்துகள் மற்றும் 48 புறநகர் பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வகையில் திட்ட வரைபடம் அமைத்து, அதன்படி கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் பேருந்து நிலையத்தின் கீழ்தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்குசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், 'பார்க்கிங்' வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. பயணியர் பயன்படுத்தும் வகையில், நான்கு 'லிப்ட்'டுகள், பணிகள் மேற்கொள்ள இரண்டு 'லிப்ட்'டுகள், மூன்று நகரும் படிக்கட்டுகள் மற்றும் ஒரு கன்ட்ரோல் ரூம் அறையும் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X