திருப்பூர்: ''பத்தாண்டுகளாக நீடித்த சட்ட சிக்கல் தீர்க்கப்பட்டு, 1,089 கால்நடை உதவி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என, கூடுதல் தலைமை செயலர் ஜவஹர் பேசினார்.
கால்நடைத்துறை கூடுதல் முதன்மை செயலர் தென்காசி ஜவஹர், திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, கால்நடைத்துறை திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் வினீத் முன்னிலையில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து பேசியதாவது: தமிழக கால்நடைத்துறை, 130 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. மாநில அளவில், 95 லட்சம் பசுமாடுகள், ஐந்து லட்சம் எருமைகள், 1.43 செம்மறி மற்றும் வெள்ளாடுகள், 12.07 கோடி கோழியினங்கள் உள்ளன.
மாநில அளவில், பயிற்சி பெற்ற, 3,477 டாக்டர்கள், 13 ஆயிரத்து, 968 பணியாளர் வாயிலாக, மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில், 3,030 கால்நடை உதவி டாக்டர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில், 1,141 கால்நடை உதவி டாக்டர் பணியிடங்கள், கோர்ட் வழக்குகளால் நிரப்பப்படாமல் இருந்தது. பத்தாண்டுகளாக நீடித்த சட்ட சிக்கல் தீர்க்கப்பட்டு, 1,089 உதவி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.