கோவை: 'பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட ரோபோக்கள் என்னாச்சு' என, அருந்ததியர் முன்னேற்ற கழகம் கேள்வி எழுப்பியிருக்கிறது.இதன் நிறுவன தலைவர் மணியரசு, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கொடுத்த மனு:
பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, கோவை மாநகராட்சிக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வழங்கப்பட்ட ரோபோக்களை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை, தளவாடங்கள் எப்போது வழங்கப்படும்? பணி நிறைவு செய்து ஒய்வு பெற்ற பணியாளர்கள் 210 பேருக்கு, நிலுவை வைத்திருக்கும் ஓய்வு பலனை, உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இதேபோல், ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் செல்வக்குமார் கொடுத்த மனுவில், 'வெள்ளலுார், மலுமிச்சம்பட்டி, கீரணத்தம் பகுதிகளில் வசிக்கும் துாய்மை பணியாளர்கள், காலை, 6:00 மணிக்குள் பணிக்கு வர முடிவதில்லை.தாமதமாக வந்தாலும், அவர்கள் வருகையை ஏற்றுக் கொள்ள வேண்டும். வார்டு அலுவலகங்களில் தொழிலாளர்களுக்கு ஓய்வறை கட்டிக் கொடுக்க வேண்டும்' என கோரியுள்ளார்.