பல்லடம்: பல்லடம் அருகே, அரசு பஸ் டிரைவர், நடத்துனரை சிறைபிடித்ததை கண்டித்து, போக்குவரத்து ஊழியர்கள், நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பிற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், பஸ்களை ரோட்டில் நிறுத்தி, டிரைவர், நடத்துனரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.போலீசார் கூறுகையில், 'காரில் வந்த செல்வகுமார் 26, சண்முகநாதன் 31, பிரேம்குமார் 26 ஆகியோர் குடி போதையில் இருந்துள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்கள் அளித்த புகார் அடிப்படையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தகாத வார்த்தை பேசியது மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதால், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீதும் வழக்கு பதியப்படும்' என்றனர்.
ஆள் மாறாட்டத்துக்கு போலீசார் ஆதரவு?
போக்குவரத்து கழக ஊழியர்கள் சிலர் கூறியதாவது:காரில் நால்வர் வந்தனர். குடிபோதையில் இருந்த இவர்களிடம், 'ஏன் இப்படி கார் ஓட்டி வருகிறீர்கள்?' என, பயணிகள் உட்பட நாங்களும் கேட்டோம். இதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு எங்களை தாக்கினர். டிரைவர் முகத்தில் ஒருவர் குத்தியதில், அவரது கண்ணில் அடிபட்டு, முகம் வீங்கி, தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட நால்வரில் ஒருவர் தலைமறைவானார். போலீசார் கைது செய்துள்ள மூவரில், இருவருக்கு இந்த பிரச்னையில் சம்பந்தமே இல்லை. தி.மு.க., பிரமுகர் சிலரின் உதவியுடன் நடந்துள்ள ஆள் மாறாட்டத்துக்கு போலீசார் ஆதரவு அளித்துள்ளனர். இதில் தொடர்புடைய நால்வரையும் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.