கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அடுத்த அம்மையகரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., நேற்று திடீர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, வருவாய்த்துறை தொடர்பான பணிகள் குறித்து டி.ஆர்.ஓ., விஜய்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சின்னசேலம் அடுத்த அம்மையகரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, கிராம கணக்குகளை ஆய்வு செய்து, அங்கீகரிக்கப்பட்ட மனை வரை படங்களை நில பதிவுருக்களுக்கு மாறுதல் மேற்கொள்ள குறு வட்ட நில அளவை வரைபடம் தயார் செய்து, மனை எண்ணை குறிப்பிட வேண்டும். பின், 'தமிழ் நிலம் கொலாப் லேண்ட்' மென்பொருளில் வரைவு செய்து தாசில்தாரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். 15 நாட்களுக்குள் மின் கையொப்பம் இட வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும், கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளான 'அ' பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல், நில அளவை, நில வரி வசூல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு, முறையாக பராமரித்திட அறிவுறுத்தினார். பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை இணையம் மூலமாக விரைந்து வழங்கிட வேண்டும் என்றார். ஆய்வின்போது, சின்னசேலம் தாசில்தார் ஆனந்தசயனன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.