பவானிசாகர் அருகே சிறுத்தை கடித்து விவசாய தோட்டத்து காவல் நாய் பலியானது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ச்சியாக வேட்டையாடி வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தை, வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது.
பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பவரது விவசாய தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த காவல் நாய், பாதி உடல் குதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. நாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி தவமணி அருகே சென்று பார்த்தபோது சிறுத்தை கடித்து நாய் பலியானது தெரிய வந்தது.
பவானிசாகர் வனத்துறையினர் கால்தடங்களை ஆய்வு செய்து, சிறுத்தை கடித்து நாய் இறந்ததை உறுதி செய்தனர். புதுப்பீர்கடவு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை இப்பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ச்சியாக வேட்டையாடி வருவதால், விளைநிலங்களில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.