கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் தளமாக சீரமைப்புக்கு ஒதுக்கிய தொகையில், 250 கோடி ரூபாயை காளிங்கராயனுக்கு வழங்க விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கான வாய்க்கால்களை சீரமைக்க, நபார்டு வங்கி கடனாக நிதி ஒதுக்கீடு செய்தது. இதில், காளிங்கராயன் வாய்க்கால் சீரமைக்க, 68 கோடி ரூபாய், தடப்பள்ளி - அரக்கன்கோட்டைக்கு,144 கோடி ரூபாய், கீழ்பவானி வாய்க்காலுக்கு, 722 கோடி ரூபாய் என கான்கிரீட் தளம் மற்றும் நவீன சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு தரப்பு எதிர்ப்பும், மற்றொரு தரப்பு ஆதரவும் தரும் நிலையில், அப்பணி கிடப்பில் போடப்பட்டு, நிதி திரும்பும் நிலை
ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி, காளிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சபை கூட்டமைப்பு செயலாளர் செல்வகுமார் கூறியதாவது:
காளிங்கராயன் வாய்க்காலில் கடந்த, 2014 முதல் 2017 வரை, '0' மைல் முதல், 12.8 வது மைல் வரை கான்கிரீட் தளம், கரை அமைத்து பேபி வாய்க்காலும் அமைத்தனர். இதனால் முன்பு கடைமடையான ஆவுடையார்பாறைக்கு தண்ணீர் சென்றடைய, 15 நாள் ஆன நிலை மாறி, ஐந்து நாளில் செல்கிறது. ஏப்., 30ல் தண்ணீர் நிறுத்தம் செய்தால் தற்போது இறுதிநாள் வரை தண்ணீர் வரத்தாகிறது. முன், 25 நாட்களுக்கு முன்பே நின்று போகும்.
தற்போது, 12.9வது மைல் முதல், 15.4 வது மைல் வரை கான்கிரீட் தளம், கரை அமைக்க, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர, பெரியவட்டம் கிளை வாய்க்கால், ஆவுடையார்பாறை பிரதான வாய்க்கால் சீரமைத்து, கான்கிரீட் தளம் அமைக்க, 13.20 கோடி ரூபாய்க்கு திட்ட வரைவு அனுப்பி
உள்ளனர். இப்பணி நடந்தால், தண்ணீர் திறக்கப்பட்ட மூன்றாவது நாளில் கடைமடைக்கு தண்ணீர் முழுமையாக செல்லும். தற்போது கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம், கரை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நிதி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான, 722 கோடி ரூபாயில், காளிங்கராயன் வாய்க்காலுக்கு, 250 கோடி ரூபாய் மட்டும் வழங்கினால், முழுமையாக காளிங்கராயன் வாய்க்காலும், பேபி வாய்க்காலும் அமைக்கப்படும். நிதி வீணாவதும் தடுக்கப்படும். சாயக்கழிவு உள்ளிட்ட எந்த கழிவும் கலக்காமல், சிறந்த விவசாயம் செய்ய வாய்ப்பாகும். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.