பவானி அருகே சாலை வசதி இன்றி, 50 ஆண்டாக தனித்தீவாக இருந்த கிராமத்துக்கு, விவசாயிகள் வழங்கிய நிலத்தில் சாலை அமைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே மைலம்பாடி பஞ்.,க்கு உட்பட்ட கரட்டுவலவு கிராமத்தில், 52 குடும்பத்தை சேர்ந்த, 204 பேர் வசிக்கின்றனர். சிறு, குறு விவசாயிகள் மற்றும் கூலி வேலை செய்வோராக உள்ளனர். இக்கிராமம் செல்ல அரசுக்கு சொந்தமான வழித்திடமில்லை. விவசாயிகளின் பட்டா நிலம் வழியாக நடந்து மட்டும் செல்லலாம்.
டூவீலர் வைத்திருந்தாலும், ஒரு கி.மீ.,க்கு அப்பால் நிறுத்திவிட்டு, நடந்துதான் வீடு செல்ல வேண்டும். மழை காலம், பயிர் விளைந்த நிலையில் நடப்பது சிரமமாகும். கர்ப்பிணி, முதியவர்களை டோலி கட்டி மருத்துவமனைக்கு துாக்கி செல்வர். எனவே, இக்கிராம கர்ப்பிணிகள், 7 வது மாதம் கடந்தால் கிராமத்துக்கு வெளியே உள்ள உறவினர் வீடுகளில் வசிப்பர்.
கடந்த, 50 ஆண்டாக சாலை கோரி, மனு வழங்கி முயல்கின்றனர். அரசுக்கு சொந்தமான இடம் இல்லாததால், மனுக்கள் கிடப்பில் போனது.
தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர் லி.மதுபாலன் ஆய்வு செய்து, கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பஞ்., நிர்வாகத்துக்கு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட பகுதியை தானமாக வழங்கினால் மட்டுமே, சாலை அமைக்க முடியும் என விளக்கி, திட்டத்தை நிறைவேற்றி வருகிறார்.
கூடுதல் கலெக்டர் லி.மதுபாலன் கூறியதாவது: இதுபற்றி, விவசாயிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விளக்கப்பட்டது. 7 விவசாயிகள் தானமாக நிலத்தை வழங்கினர். இதில் ஆறு பேர் இங்கு வசிக்கின்றனர். ஒரு நிலத்தின் வாரிசுதாரர், அமெரிக்காவில் வசிப்பதால், அவரிடம் நிலமையை பேசி, நிலம் பெறப்பட்டது.
நிலம் கையகப்படுத்தப்பட்டு, 50 லட்சம் ரூபாய் செலவில் கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இங்கு, 50 குடும்பத்தினர் வசித்தாலும், மருத்துவ வசதி உட்பட எந்த வசதியும் பெற முடியவில்லை. 900 மீட்டர் நீளத்துக்கு நிலம் தானமாக பெறப்பட்டு, கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. விரைவாக சாலை அமைத்து, பயன்பாட்டுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அவர்களது, 50 ஆண்டு சாலை கனவு நினைவாகிறது. இவ்வாறு கூறினார்.