மாமல்லபுரம் :மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. சர்வதேச செஸ் வீரர்கள் விளையாடுகின்றனர்.சர்வதேச போட்டியில் விளையாடும் போஸ்வானா நாட்டு அணி பயிற்சியாளர் டிங்க்வென், அங்குள்ள புல்வெளியில் உள்ள பிரமாண்ட செஸ் பலகை மாதிரி விரிப்பில் விளையாடியோரை கண்டார்.இதில் 7 வயது சிறுமி ஷர்வானிகா விளையாடியதை கண்டு ஆச்சரியப்பட்டார். உடனே டிங்க்வென், சிறுமியின் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்த அவருடன் செஸ் விளையாடி தோற்றார்.வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டராக இருந்தவர், சிறுமியிடம் தோற்றாலும், சிறுமியை துாக்கி கொண்டாடி, ''சிறந்த வீராங்கனையாக வெற்றி பெறுவாய்,'' என வாழ்த்தினார்.
ஷர்வானிகா, அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம், சரவணன் - அன்புரோஜா தம்பதியின் இளைய மகள்.சிறுமியர் பிரிவு செஸ் போட்டியில், தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ள இவர், மாநில, தேசிய போட்டிகளில், பதக்கமும் வென்று உள்ளார்.இவரது அக்கா ரட்ஷிகாவும், 15, செஸ் வீரர்.இலங்கையில், வரும் 25ல் நடக்கும் ஆசிய போட்டியில், இந்தியா சார்பில் ஷர்வானிகா விளையாட உள்ளார். இப்போட்டிக்கு செல்ல, தமிழக அரசு உதவ வேண்டும் என, தாய் அன்புரோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.