பஸ் டயர் வெடித்து விபத்து; கல்லூரி மாணவர்கள் காயம் | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
பஸ் டயர் வெடித்து விபத்து; கல்லூரி மாணவர்கள் காயம்
Added : ஆக 09, 2022 | |
Advertisement
 அச்சிறுப்பாக்கம் ; முருங்கை கிராமத்திலிருந்து மதுராந்தகம் வந்த நகர பேருந்து சக்கரம் வெடித்ததில், இரு மாணவ - மாணவியர் காலில் காயம் ஏற்பட்டது.முருங்கையில் கிராமத்தில் நேற்று காலை புறப்பட்ட தடம் எண்: '12ஏ' நகர பேருந்து, மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்தது.கொங்கரை, கரசங்கால், வெளியம்பாக்கம் உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயணியர் ஏறினர். பேருந்தில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் இருந்தனர்.

அறுபதுக்கும் மேற்பட்ட பயணியருடன் வந்த பேருந்து, ஊனமலை பகுதியில் நிலைதடுமாறியது. இதை கவனித்த ஓட்டுனர், பேருந்தை நிறுத்தி சக்கரங்களை பரிசோதித்தார். பின், குறைந்த வேகத்தில் பேருந்தை இயக்கினார்.மதுராந்தகம் ஏரிக்கரையில் இருந்து நகர பகுதிக்குள் எஸ்.பி.ஐ., வங்கி அருகே வந்தபோது, 'டமார்' என பயங்கர சத்தத்துடன் பேருந்தின் பின்புற வலது சக்கரம் வெடித்தது.பேருந்து நிலை தடுமாறியதில் கல்லுாரி பயிலும் ஒரு மாணவர், ஒரு மாணவி என, இருவரின் காலில் காயம் ஏற்பட்டது.

ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தியதும், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அலறியடித்து இறங்கினர்.அடிபட்ட இருவருக்கும், மதுராந்தகம் மருத்துவமனையில் 'ஸ்கேன்' எடுக்கப்பட்டது. சிறிய காயம் என்பதால், அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.பெயர் குறிப்பிடாத பேருந்து பயணி ஒருவர் கூறியதாவது:மதுராந்தகம் பணிமனையில் 60க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் உள்ளன. இவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இது போன்று பேருந்துகளில் ஏற்படும் திடீர் பழுதால், மக்கள் அவதி அடைகின்றனர்.இந்த பேருந்தின் சக்கரம் பாதிக்கும் மேல் தேய்ந்த நிலையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது. தரமான பேருந்துகளை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பெயர் குறிப்பிடாத மதுராந்தகம் பணிமனை மேலாளர் கூறுகையில், 'பேருந்துக்கு புதிய சக்கரம் தான் பொருத்தப்பட்டு உள்ளது. விபத்து ஏற்பட்டது எதிர்பாராதது' என்றார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X