பழமையான கோவிலுக்கு தேர் காணிக்கை; விரைவில் தேரோட்டம் நடத்த திட்டம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பழமையான கோவிலுக்கு தேர் காணிக்கை; விரைவில் தேரோட்டம் நடத்த திட்டம்
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
Latest district News

உடுமலை : பழமை வாய்ந்த, மூவர் கண்டியம்மன் கோவிலுக்கு, காணிக்கையாக தேர் நேற்று வழங்கப்பட்டது; நீண்ட இடைவெளிக்குப்பிறகு கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், அப்பகுதியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில் பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இரு கருவறை; ஒரே அம்மன் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை இக்கோவில் உள்ளடக்கியதாகும். இக்கோவிலில், அப்பகுதி பக்தர்கள், சிறிய அளவிலான திருப்பணிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று, எஸ்.அம்மாபட்டி காடகாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், மூவர் கண்டியம்மன் கோவிலுக்கு, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேரை, காணிக்கையாக வழங்கினார்.

முன்னதாக, அம்மாபட்டி கிராமத்தில், பாரம்பரிய முறைப்படி, திருத்தேருக்கு பூஜைகள் நடந்தது. அங்கிருந்து ஊர்வலமாக வந்து திருத்தேரை, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.பின்னர், கோவிலை சுற்றி தேர் வலம் வந்த பிறகு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

கோவில் செயல் அலுவலர் அம்சவேணி கூறுகையில், '' பக்தரால், வழங்கப்பட்ட திருத்தேர் கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும். அரசு அனுமதி பெற்று, கார்த்திகை ஜோதி, மாசி மகம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், மூவர் கண்டியம்மன் கோவிலில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.பழமை வாய்ந்த இக்கோவிலில், முன்பு, திருத்தேரோட்டம் சிறப்பாக நடந்துள்ளது. காலப்போக்கில், தேரோட்டம் தடைபட்டு, தேரும், பயன்பாடு இல்லாமல், போனது. தற்போது, பக்தர் வழங்கியுள்ள திருத்தேரால், நீண்ட காலத்துக்கு பிறகு அப்பகுதியில், தேரோட்டம் நடைபெற உள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X