20 ஆண்டுகளாக நீர்த்தேக்க முடியாத ஜம்புலிபுத்தூர் கண்மாய் | தேனி செய்திகள் | Dinamalar
20 ஆண்டுகளாக நீர்த்தேக்க முடியாத ஜம்புலிபுத்தூர் கண்மாய்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News


ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் ஜம்புலிபுத்தூர் கண்மாயில் 20 ஆண்டுகளாக நீர் தேக்க முடியாததால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகி வருகின்றன. மூன்று போகம் விளைவித்த விவசாயிகள் மாற்றுத் தொழில் தேடி வெளியூர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால், கலெக்டர் முரளீதரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இந்த ஒன்றியத்தில் உள்ள ஜம்புலிப்புத்தூர், லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி உட்பட பல கிராமங்கள் பயன் பெறும் விதமாக எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது ஜம்புலிபுத்தூர் கண்மாய்.மேற்குத்தொடர்ச்சி மலை நாகலாறு ஓடை நீர் வரத்தால் கண்மாய்க்கு நீர் கிடைத்தது. ஓடையில் பல இடங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகள், மலைப் பகுதியில் குறைவான மழை இவற்றால் ஜம்புலிபுத்தூர் கண்மாய்க்கு நீர் வரத்து பாதித்தது.

இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு கண்மாயில் நீர்தேங்க வில்லை. கண்மாய் நீரை நம்பி இருந்த விவசாய நிலங்கள் தரிசாகின. இதனால் கண்மாய் பாசனம் மூலம் மூன்று போகம் சாகுபடி செய்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் விவசாயிகள் இப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வெளியூர் சென்று விட்டனர். நாகலாறு ஓடையில் வரும் மழை நீரை பொதுப் பணித்துறை சரிசமமாக பங்கீடு செய்து ஜம்புலிப்புதூர் கண்மாய்க்கும் கிடைக்க செய்ய விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.பழுதான மடையால் வீணாகும் நீர்டி.ராமராஜ், ஆயக்கட்டு விவசாயி, லட்சுமிபுரம்: கண்மாய் அமைத்து 35 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதுவரை மூன்று முறை மட்டுமே நிரம்பி உள்ளது. கண்மாயின் கிழக்கு பகுதி மடை சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்க வில்லை. தற்போது கண்மாயில் நீர் தேங்கினாலும் மடை வழியாக வெளியேறி வீணாகிறது. தற்போது கண்மாயில் சீமை கருவேல் மரங்கள் அதிகம் வளர்ந்து புதர் மண்டியுள்ளது.

கரையில் வளரும் சீமை கருவேல மரங்களால் கரை உறுதித் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நாகலாறு ஓடையில் வரும் நீர் ஆசாரிபட்டி அருகே பிரிக்கப்பட்டு கூடுதலான அளவில் ரெங்கசமுத்திரம் கண்மாய்க்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஜம்பலிபுத்தூர் கண்மாய் பல ஆண்டுகளாக காய்ந்து வருகிறது. நாகலாறு ஓடையில் சண்முகசுந்தரபுரம் அருகே சமீபத்தில் ரூ.1.5 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பனையால் ஜம்பலிபுத்தூர் கண்மாய்க்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டு, தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்தது.
பாதிப்பில் கால்நடை வளர்ப்புஎஸ்.சோலையப்பன், விவசாயி, லட்சுமிபுரம்: ரங்கசமுத்திரம் கண்மாய்க்கு நாகலாறு ஓடை, வருஷநாடு வைகை ஆறு மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. ஆனால் சில கி.மீ., துாரம் உள்ள ஜம்புலிப்புத்துார் கண்மாய் காய்ந்து வருகிறது. விவசாயம் பாதித்ததால் இப்பகுதியில் கால்நடை வளர்ப்புத் தொழில் பாதித்துள்ளது. விவசாயத்தை தொடர முடியாத இளைய தலைமுறை மாற்றுத் தொழில் தேடி வெளியூர் செல்கின்றனர். வருஷநாடு வைகை ஆற்றில் இருந்து ரங்கசமுத்திரம் கண்மாய்க்கு வரும் நீரை கதிரியகவுண்டன்பட்டி அருகே பிரித்து ஜம்புலிப்புத்தூர் கண்மாய்க்கும் கிடைக்க கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜம்புலிப்புத்தூர் கண்மாய் ஒருமுறை நிரம்பினால் இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரால் மூன்று போகம் விவசாயத்தை தொடர முடியும். தற்போது ஒரு போகத்திற்கே விவசாயிகள் அல்லாடுகின்றனர். தற்போதுள்ள சூழலில் புதிய கண்மாய் உருவாக்கும் வாய்ப்பே இல்லை. இருக்கும் கண்மாய்களை முறையாக பராமரித்து நீர் தேக்கி விவசாய சாகுபடியை பெருக்க நடவடிக்கை அவசியம், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X